
அடைமழைக் காலத்தில்
உன் உடை தேகம் நனையாமலிருக்க
ஒரு குடையுடன் காத்திருக்கிறேன் நான்!
நீவரும் வரை என் கால் நனைத்துப் போகும்
செம்மண் மழைநீரை பார்த்திருக்கிறேன்!
சாலையின் இடையில் உள்ள
ஒரு வளைவில் இருந்து நீ
என் காட்சிக்கு புலப்படத் தொடங்குகிறாய்!
மழையை ரசித்து வரும் நீ,
எனைப் பார்த்ததும் வெட்கம் காட்டி
தலை குனிகிறாய்!
தரையில் மழைநீர் உன் முகம் காட்டுகிறது!
உனக்கும் எனக்கும் இடையில்
முன்பு நூறு மழைத் துளிகள் விழுந்தன!
அது பத்தாகக் குறையும் போது
நீ என் அருகில் நிற்கிறாய்!
என் கைகளில் உள்ள குடையை
உன்னிடம் தர முற்படுகையில்
நீ வானம் பார்த்து சிரிக்கிறாய்!
இப்போது மழை நின்று
இலேசான தூறல் மட்டுமே தொடர்கிறது!
குடைக் கம்பிகளை நான் மடிக்க
அது மழைநீரை கண்ணீராய் வடிக்கிறது!
நீ எனைத் தாண்டி முன் செல்கிறாய்
நான் உன்னை பின் தொடர்கிறேன்!
நீ நடக்கும் போது
உன் பாதங்கள் மழைநீரை பிரிக்கின்றன,
அவை இணையும் முன்
என் பாதங்கள் மீண்டும் பிரிக்கின்றன!
நான்கு பாதங்க்ள் மண்ணில் செயல்பட்டாலும்,
இரண்டு காலடி ஓசைகளே கேட்கின்றன!
சந்தேகத்தொடு நீ திரும்புகையில்,
நான் சந்தோசத்தோடு உன் முகம் பார்க்கிறேன்!
வழியில் பள்ளிச் சிறுவர்கள்
வானவில்லைக் கண்டு பரவசம் அடைகின்றனர்,
கூடவே நீயும்...
ஆனால் உன் சந்தோசத்தில்
நான் ஆயிரம் வானவில்களை பார்ப்ப்தறியாமல்........
உன் வீடிருக்கும் தெரு வந்ததும்
நீ என்னைத் திரும்பிப் பார்க்கிறாய்!
சிவப்பு விளக்கு விழுந்த இரயில் பாதையென
என் அன்றைய காதல் பயணம் முடிவடைகிறது!
உன் பிரிவுக்கு வருந்திக் கொண்டே
என் வீட்டிற்கு திரும்புகையில்,
வானில் ஒரு வானவில்
மீண்டும் உன்னை நினைவூட்டுகிறது!

No comments:
Post a Comment